முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அவரின் சட்டத்தரணி ஒரு பிரேரணையை சமர்ப்பித்து விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
காலி முகத்திடல் அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.