தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, நீர் விரயம் ஏற்படும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்ததாக நீர் விரயம் ஏற்படும் இடங்களாக அரச அலுவலகங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் (கட்டணங்கள்) ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார் .
பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுவதனால் நீர் விரயம் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் வீணாவதால் சபைக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்படுவதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மேற்படி இடங்களுக்கு நீர் விநியோகத்திற்காக குறிப்பிட்ட தொகையை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே குடிநீர் குழாய் உடைப்பு, தண்ணீர் கசிவு போன்ற காரணங்களால் கணிசமான அளவு குடிநீர் வீணாகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.