விபத்தொன்றினால் இடம்பெற்ற இரண்டு வயது குழந்தையொன்றின் மரணத்தை மறைத்து, 4 வருடங்கள் தலைமறைவாகியிருந்த தந்தையும் மகளும் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை – முத்துமால கிராமத்தைச் சேர்ந்த குறித்த குழந்தை 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் வீட்டிற்கு தேயிலை பறிப்பதற்காக சென்ற தமது தாயுடன் சென்ற குறித்த குழந்தை, சந்தேகநபரான பெண் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளது.
பின்னர், இலைகளை ஏற்றிச் சென்ற லொறி மோதியதால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி அவரின் சடலத்தை குறித்த பெண்ணும் அவரது தந்தையும் வீதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், பின்னர் லொறியில் மோதி சிறுமி இறக்கவில்லை என சட்ட வைத்திய அறிக்கையுடன் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
உயரமான வாகனம் மோதியதால் விபத்து ஏற்படவில்லை என தடயவியல் அறிக்கை தெரிவிக்கிறது.
இதன்படி, விபத்தை மூடிமறைக்கும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் பதுளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பாரப்படுத்தப்பட்டது.
அதனூடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரான தந்தை மற்றும் மகள் பற்றிய உண்மைகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, பதுளை – முத்துமால கிராமத்தில் வைத்து 78 வயதுடைய சந்தேகநபரையும் 43 வயதான அவரது மகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.