அடுத்த வருடம் முதல் ஐந்து வருடங்களுக்கு பயிரிடப்படாத அனைத்து வயல் நிலங்களையும் அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதுவரை விவசாயம் செய்யப்படாத 100,000 ஏக்கர் நெற்செய்கை நிலங்கள் உள்ளதாகவும், 2023ஆம் ஆண்டு அந்த வயல் நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் எனவும் நாட்டில் விவசாயம் செய்யப்படாத அனைத்து நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், தரிசு நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு விவசாய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார் .
பயிரிடப்படாத நெற் காணிகளின் உரிமையாளர்கள் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொண்டால் பிரச்சினையில்லை எனவும், அவ்வாறு பயிர் செய்யாத பட்சத்தில் அந்த நிலம் நிச்சயமாக அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, நிலத்தின் உரிமையாளர்கள் அந்தந்த நிலங்களில் பயிர் செய்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து தேவைப்பட்டால் விவசாயம் செய்யலாம் என்றும், அவர்கள் விவசாயம் செய்யாவிட்டால், நில உரிமையாளர்களுக்கு ஒரு பகுதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் கூறினார்.