கடத்தப்பட்டதாக கூறி கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபா பணத்தை பெற முயன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ஆனமடுவையில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது மகள் வசிக்கும் பகுதிக்கு சென்றதாகவும், அதன்போது தனது கணவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து அன்றைய தினம் ஆனமடுவ நகருக்கு வருவதாக கூறியதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
எனினும் அன்று மாலையில் இருந்து அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனமடுவ நகருக்கு தனது தாயாரை எதிர்பார்த்து காத்திருந்த பெண்ணின் இளைய மகன் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம், ஆனமடுவ பொலிஸார் குறித்த பெண் பயணித்த இடங்கள் மற்றும் அது தொடர்பான வீதிகளின் கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பின்னர், அவர் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடனை அடைப்பதற்காக கணவரை ஏமாற்றி மறைத்துவிட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.