மில்கோ பிரைவேட் லிமிடெட் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையை இணைத்து உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என அமைச்சர் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூர் கால்நடைத் தொழிலை மறுசீரமைப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவனப் பற்றாக்குறையால் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது .
இதனால் பால், முட்டை மற்றும் கோழிப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான அனைத்து விடயங்களையும் கருத்திற்க் கொண்டு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மில்கோ மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் இணைப்பதன் மூலம், செலவுகளை சமாளிக்கக்கூடிய அளவில் வைத்து உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
வரவு -செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் அடுத்தாண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், நாட்டில் கால்நடைத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு விரிவான மறுசீரமைப்பு அவசியமானது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.