கடந்த 9ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற தொடர் வன்முறைச் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.
வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழப்புக்கள் தொடர்பில் மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகள் கட்டப்பட்ட காலத்தில் உள்ள மதிப்பை வைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல என்றும், தற்போதைய மதிப்பின்படி இழப்பீடு தொகையை மதிப்பிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட எம்.பிமார்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மதிப்பீடு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
கல்கிசை மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் சி.தொலவத்த, கீதா குமாரசிங்க, ஜயந்த கெட்டகொட, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, ஜகத் குமார, சீதா அரம்பேபொல, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோரின் வீடுகளும் சொத்துக்களுமே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லோககேவின் சொத்துக்களுக்கே மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது 46 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீதா அரம்பேபொலவின் தலங்கம வீடு உள்ளிட்ட சொத்துக்களுக்கு இரண்டாவது அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. அது 14 கோடியே 4 இலட்சத்து 86000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், எம்.பிகள் சமர்ப்பித்த மதிப்பீட்டு அறிக்கைகளில் இந்தத் தொகையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகக் கூறப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் கூறுகின்றன.