கனேடிய பிரதமரை சாடினார் ஷி ஜின்பிங் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராக சாடும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் இந்தோனேசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது இடம்பெற்றுள்ளது.
மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விடயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு கனடா பிரதமரை குற்றம் சாட்டிப் பேசினார்.
கனடா தேர்தலில் சீனா உளவு பார்த்ததாகவும் தலையீடு செய்ததாகவும் கூறப்படுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது ட்ரூடோ பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார் ஷி ஜின்பிங்.
பேச்சுவார்த்தை விவரம் கசிந்தது குறித்துப் பேசிய ஜின்பிங், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையாக இல்லை என்றும் இத்தகைய நடத்தை பொருத்தமற்றது என்றும் கூறியுள்ளார்.
‘நாம் பேசிய அனைத்து விடயங்களும் செய்தித்தாள்களுக்கு கசியவிடப்பட்டிருக்கின்றன. இது முறையற்றது’ என்று ஷி ஜின்பிங், ட்ரூடோவிடம் தெரிவித்துள்ளார்.