கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இதுவரை குற்றவாளி என நிரூபிக்கப்படாததால் நிரபராதி என்ற அடிப்படையில் அவருக்கு தேவையான சட்ட ஆதரவு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது தனுஷ்கவுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரராக உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் கைதான தனுஷ்க தொடர்பில் தேடி பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அவர் சட்டவிரோதமான செயலை செய்திருந்தால் அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது இலங்கை கிரிக்கெட் சபையின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அவர் ஏதேனும் ஒருவகையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாராயின் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.
இதுவரை பல வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பான பொலிஸ் அறிக்கையில் உள்ள தகவல்களை வெளியிட சிட்னி நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.