எகிப்து சென்று பிரமிட்டை பார்க்கக்கூடிய இயலுமை கொண்டுள்ள ஜனாதிபதியினால் சக மக்களாக பெருந்தோட்ட மக்களை நோக்கி பார்வையை திருப்ப இயலாமல் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க MP தெரிவித்தார்.
ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போது, அவர் இதனைத் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களிடையே, மந்த போசணை நிலை அதிகரித்துள்ளதுடன் பாடசாலைக்கு மாணவர் வருகையும் குறைவடைந்துள்ளது.
புள்ளிவிபரங்களுக்கு, உண்மை நிலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. இந்த புள்ளிவிபரம் உண்மை நிலையை மறைக்கும் ஒரு ஆயுதமாகும்.
23 இலட்சம் சிறுவர்களுக்கு உணவு இல்லை. உணவு இன்மை மற்றும் பஸ் கட்டணம் அதிகரிப்பினால் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்துவருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த குழந்தைகள் பிறப்பு வீதம் 12.5 சதவீதமாகும். நுவரெலியா மாவட்டத்தில் இது 20 சதவீதமாக காணப்படுகிறது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உயரத்திற்கேற்ப நிறையில்லாத சிறுவர்களின் வீதம் 8.2 சதவீதமாகவும், பெருந்தோட்ட பகுதிகளில் 17.4 சதவீதமாகவும் காணப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரதம்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்ட மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினரை காட்டிலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஜனாதிபதியோ, அரசாங்கமோ கண்டுகொள்வதில்லை என்றார்.. இந்த பிரேரணை வழிமொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பெருந்தோட்டப்பகுதியில் பாரியளவான உணவு பாதுகாப்பு இன்மை நிலை காணப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது என்றார்.