எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில், அண்டை நாடான இலங்கையின் பிரதிநிதியாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நசீம் கலந்துகொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் எவருக்கும் தகுதி இல்லையா அல்லது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு தகுதி இல்லையா? இலங்கையின் பணத்தை பயன்படுத்த வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒருவரை எவ்வாறு பங்குபெறச் செய்யமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களில் பல கருத்துகள் வெளியாகிவருகின்றன. இது நாட்டின் இறையாண்மை மீறும் செயல் என்றும், நாட்டின் தரத்தை குறைத்து மதிப்பிடும் செயல் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த கேள்விக்கு ஆளும்கட்சியிலிருந்து உரிய பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.