பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனினும் இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும், பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்ட கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
இந்த போராட்டத்துக்கு தங்களது முழுமையான ஆதரவு இருக்கும் என்றும், இது அமைதியான முறையில் நடைபெறும் போராட்டம் என்பதால் இதற்கு இடையூறுவிளைவிக்க வேண்டாம் என்று பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.