ராஜபக்ஷ குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து மக்கள் எதிர்பார்த்ததாகவும், அதை அவர் பொருட்படுத்தவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இந்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ஷவும் பங்கேற்றார். இந்த முடிவுகளுக்கு அவரும் உடன்படுகிறார்.
இதை நடைமுறைப்படுத்தாவிடின் இந்த கட்சியே பிளவுபடும்.
கட்சியில் இந்தக் கருத்துக்காக நான் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறேன். அத்துடன் , நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தி வருகிறேன்.
பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, கஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த நடவடிக்கையில் என்னுடன் கைகோர்த்துள்ளனர்.
ஒருவர் நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலும், மற்றையவர் நாட்டில் ஊட்டச்சத்து உணவுப் பற்றாக்குறை ஏற்படுமா என்பது தொடர்பிலும், எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கஞ்சனவும் உரையாற்றவுள்ளனர்.
அத்துடன், கட்சியின் இளைஞர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டும். கட்சிக்கு புதிய முகத்தை கொடுத்து புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.