சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், தங்களது தொழிலை தொடர்ந்தும் கொண்டுநடத்துவதற்கு தேவையான மேலதிக நிதிக்கான கேள்வி அதிகமாக காணப்படுகிறது.
எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சியாளர்களை மீண்டெழச் செய்வதற்கும் அவர்களது மேலதிக நிதித் தேவையை பூர்த்திசெய்வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நிதியமைச்சு என்பவற்றுக்கு இடையில் 13.5 மில்லியன் டொலருக்கான (4,900 மில்லியன் ரூபா) இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 8 வங்களின் ஊடாக இந்த கடனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நெஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன் ட்ரஸ்ட் மற்றும் சம்பத் வங்கி ஊடாக இந்த கடன்களை பெறமுடியும்.