ஓய்வுபெறும் வைத்தியர்களின் சேவைக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தகவல் வெளியிடும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெறுவதால் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையை பரிசீலித்த அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது 63 வயதை பூர்த்திசெய்துள்ள வைத்தியர்கள் மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வுபெற வேண்டும்.
அத்துடன், தற்போது 62 வயதை பூர்த்திசெய்துள்ளவர்கள் 63 வயதாகும்போதும், 61 வயதை பூர்த்திசெய்தவர்கள் 62 வயதாகும்போதும், 60 வயதை பூர்த்திசெய்தோர் 61 வயதாகும்போதும், 59 வயதை பூர்த்திசெய்தோர் 60 வயதாகும்போதும் புதிய வருடத்தில் ஓய்வுபெறவேண்டும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, குறித்த சேவைகால நீடிப்பு ஓராண்டில் முடிவடையும் எனவும், அதன் பின்னர் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் 60 வயதில் வைத்தியர்கள் ஓய்வுபெற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.