எமக்கு 2 இலட்ச ரூபா நிதி வேண்டாம், எமது காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
மன்னாரில் இன்று (13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் தொலைத்தது ஆடு,மாடுகளை அல்ல. எமது பிள்ளைகளையே. எமது வீடுகளுக்கு வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 2 இலட்சம் ரூபா பணமும் மரண சான்றிதழும் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.தற்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து 2 இலட்சம் தருவதாக கூறுகின்றனர்.
ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும் நீதியை பெற்றுத்தரவும் செயல்படவில்லை.
அவர்கள் தமது அரசினையும், இராணுவத்தையும் பாதுகாப்பதற்காக போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தாய்மார் வீதிகளில் நின்று போராடி வருகின்றனர். கையில் ஒப்படைக்கப்பட்டஇகண் முன்னே பிடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம்.
எமக்கு நீதி வேண்டும்.எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?என்றே நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.நாங்கள் அரசிடம் நிதி கேட்கவில்லை.இவர்கள் வழங்கவுள்ள 2 இலட்சத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.