நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் இதுவரை அளிக்கப்பட்டுள் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது
இதேவேளே, திலினி பிரியமாலியுடனான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பிரசாரத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முறைப்பாடு செய்யவுள்ளது.
இந்த முறைப்பாடு இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதுவரை அவருடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களின் பெயர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகின்றன.
அதேநேரம், திலினி பிரியமாலியின் நிறுவனத்தில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.