கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்குநர்களுடன் விரைவில் இணக்கத்தை எட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதன் முன்னேற்றம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சிலர் நாடு சாதாரணமாக இருப்பதாக நினைத்துகொண்டு கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சில நெருக்கடிகள் தீர்ந்தாலும் நாடு இன்னும் முழுமையாக நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கம் எட்டப்பட்டது. கடன்கொடுநர்களுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த இணக்கம் காண பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் சான்றழிப்பைக் கொண்டு ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல்.
அதன்பின்னர், அபிவிருத்தி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை முற்கொண்டுசெல்லல் ஆகிய நான்கு விடயங்களையும் மேற்கொள்ளல் வேண்டும்.
மேற்படி ஒவ்வொரு கட்டத்திலும் எட்டப்படும் வெற்றியைக் கொண்டே அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுக்க முடியும்.
இதில் முதலாவது கட்டம் வெற்றியளித்துள்ளது. இரண்டாவது கட்டத்தை வெற்றிக்கொள்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
கடன்கொடுநர்களுடனான பேச்சுவார்த்தையில் இணைத்தலைமை வகிக்க ஜப்பான் இணக்கம் வெளியிட்டுள்ளது.
சிதைவடைந்திருந்த ஜப்பானுடனான உறவு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனூடாக பல உதவிகளை பெறமுடியும்.
கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. 2015 இல் எமது அரசாங்கம் அச்சிட்டது போன்று 13 மடங்கு அதிகமாக, கடந்த சில வருடங்களில் பணம் அச்சிடப்பட்டது.
அதேபோல, உற்பத்திகள் அதிகரிக்கவில்லை. எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில் நாம் எடுத்த நடவடிக்கைளின் விளைவாக செப்டெம்பர் மாத பணவீக்கத்தை 69.8 சதவீதமாக வைத்திருக்க முடிந்தது.
அதேபோன்று, நட்டம் ஏற்பட்டுவரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019 வரிக் கொள்கைகளின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% வரிகள் மூலம் ஈட்டப்பட்டது. ஆனால் இந்தக் கொள்கையை மாற்றியதன் விளைவாக வரி வருவாய் 8.5% ஆகக் குறைந்தது.
இப்போது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அதனை மீண்டும் 14% ஆக அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளோம்
நாங்கள் ஏற்கனவே சீனாவுடன் கடன் மறுசீரமைப்புக்கான பூர்வாங்க பேச்சுவார்தையை தொடங்கியுள்ளோம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டைத் தொடர்ந்து சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவோம்.
சீனா பழங்காலத்திலிருந்தே எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது, இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்கள் அதையே செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இலங்கைக்கு கடன்களை வழங்கிய நாடுகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் லண்டன் கிளப் போன்ற தனியார் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.
இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தை நாம் பராமரிக்க வேண்டுமானால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% அரசாங்க வரி வருவாயைப் பராமரிக்க வேண்டும். பணத்தை அச்சடித்துக்கொண்டே இருந்தால் நமக்கு எதிர்காலம் இருக்காது என்பதால், வரிகள் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜப்பானில் இந்திய பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மோடியிடமிருந்து எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்றார்.
மீண்டும் மக்களை இயல்பு நிலைக்கு திருப்ப, பழைய விடயங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.