நிலுவை மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குரிய 6 இலட்சத்து 37 ஆயிரத்து 448 ரூபா நிலுவை மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் ஹேமந்த ரணசிங்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகப்பூர்வ இறப்பர் முத்திரையுடன் குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை மின் கட்டணத்தினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர குறித்த வீட்டினை கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய பெயரிற்கு பதிவு செய்துக்கொண்டுள்ளார் என்பதோடு, அப்போது 4 இலட்சத்து 94 ஆயிரத்து 739 ரூபாய் மின் கட்டணம் நிலுகையாக செலுத்தப்படாமலிருந்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதி வரை அவ்வீட்டிற்கு 637,448 ரூபாவாக மின்கட்டணம் பதிவாகியுள்ளது.
வழங்கப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் மின் கட்டணத்தை செலுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தவறும் பட்சத்தில் மின் இணைப்பினை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.