காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை முன்னெடுக்கவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
காலநிலை அச்சுறுத்தல் குழு மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் தேசிய அளவிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, காலநிலை மாற்றத்தின் விளைவாக விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி போன்ற துறைகளுக்கு ஏற்படக்கூடிய எத்தகைய பாதிப்புகளையும் தீர்க்க சர்வதேச உதவியை இலங்கை நாடவுள்ளது. இலங்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதும், காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை தேசத்தை தயார்படுத்துவதும் முக்கிய நோக்கமாகும் என விஜேவர்தனவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 நாடுகளை உள்ளடக்கிய காலநிலை அச்சுறுத்தல் குழுவும் விரைவில் இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலநிலை சவால்களை கருத்திற்க் கொண்டு இலங்கையின் அபிவிருத்தி கொள்கைகளும் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.