இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களின் இறக்குமதித் தடையை அரசாங்கம் தளர்த்தவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று, அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது,
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படலாம் அல்லது அத்தியாவசியமானவை அல்ல என்ற அடிப்படையில் குறித்த பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மிகக் குறைந்த அளவில் உள்ள நிலையில் எரிவாயு, எண்ணெய், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய பணம் தேவைப்படுகிறது. எனவே அரசாங்கம் முன்னுரிமை பட்டியலை உருவாக்க விரும்புவதாக சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கை வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, 708 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இந்தநிலையில் எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.