சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் ரயில் நிலைய செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 21,000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டிய ரயில்வே திணைக்களத்தில் தற்போது 14,000 ஊழியர்கள் மாத்திரமே கடமைகளில் ஈடுபடுவதாக பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 250 இற்கும் அதிக ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ரயில்வே பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.