Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால், அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 107 வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வாவிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஏப்ரல் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2019/04 ஆம் ஆண்டுக்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஏப்ரல் 24 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் நட்டஈடு வழங்கப்படும் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த நபருக்கு 5 இலட்சம் ரூபாவும், சொத்து சேதத்திற்கு அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நட்டஈடு வழங்குவதற்காக அமைச்சுப் பத்திரத்தை இழப்பீட்டு அலுவலகத்திற்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்ட தகவல் அளித்தும் தாக்குதலை தடுக்க தவறியதால் தாக்குதலில் உயிரிழந்த, நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு கோரி 107 மனுக்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தபோதும், பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச அதிகாரிகள் குழு தமது பொறுப்பை புறக்கணித்ததாகவும், தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகவும், கடமை தவறியதாகவும், அதற்கான நஷ்டஈட்டை மீட்டுத்தருமாறும் மனுதாரர்கள் நீதிமன்றில் கோரியுள்ளனர் .

இந்நிலையில் இந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

#Lankadeepa

Keep exploring...

Related Articles