இலங்கையில் சிறுவர் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதி சபாநாயகரின் அனுமதியுடன் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு போசாக்கு குறைபாடு உள்ள நாடுகளில் இலங்கை 6வது இடத்தில் உள்ளதாக யுனிசெஃப் அறிக்கை காட்டுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்இ குழந்தைகளின் போசாக்கின்மையில் தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாற்பத்து மூன்று இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த அவர், அதனை இடைக்கால வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் எனவும் கூறினார்.