இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் 7 பேர், அந்நிறுவனத்தின் மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டு ,வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய விளையாட்டு சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (28) கண்டிக்கு வந்து மல்வத்து அஸ்கிரிய பெரியவர்களைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கிரிக்கெட் நிறுவனத்தில் பணியாற்றும் 7 அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல அனுமதி கோரியிருந்தனர்.
அவர்களுக்கு வணிக வகுப்பு விமானங்கள் மற்றும் அந்த நாடுகளில் உள்ள சிறந்த ஹோட்டல்களில் தங்கும் வசதியுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 650 டொலர்கள் செலவுக்கு வழங்கப்படவிருந்தது.
இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன், அத்துடன், சரியானதைச் செய்யவே இங்கு வந்தேன்.
இப்படி எத்தனை பேர் அநாவசியமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதை எதிர்காலத்தில் தெரிந்து கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.