விசா ரத்து செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி ஃபேசரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் குடிவரவு திணைக்களம் ஆரம்பித்துள்ளன.
இதற்கிடையில், கெய்லி ஃபேசர் சமீபத்தில் சமூக ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.
எனினும், அதற்கு எதிரான சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகக் கூறும் அவர், அந்த முறைப்பாடு தொடர்பில் வெலிகம பொலிஸாரிடமிருந்து சம்மன் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.
வெலிகம பொலிஸாரிடம் சென்ற பின்னர், இருட்டு அறையொன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தன்னைத் துன்புறுத்திய நான்கு பேரும் அங்கிருந்ததாகவும், தான் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்பட்ட புகார் பொய்யானது என்று கடிதம் எழுதி தறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
எனினும், தான் அதனை நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸாரிடம் நாம் வினவினோம்.
குறித்த பெண் வெளியிட்டுள்ள காணொளி நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்ம் நோக்கில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதியன்று குறித்த பிரித்தானிய யுவதியான கெய்லி ஃபேசர், வெலிகம – பெலான பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த போது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகமின்னஞ்சல் மூலம் கொழும்பு பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, குறித்த முறைப்பாடு தொடர்பில் மாத்தறை பிரிவு மற்றும் வெலிகம தலைமையக பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதியன்று வெலிகம தலைமையகப் பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரையும், சம்பந்தப்பட்ட யுவதியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்பாட்டின் பேரில் விசாரணையைத் ஆரம்பித்தனர்.
அதன்போது, சந்தேகநபர்கள் தனது நண்பர்கள் எனவும் அவர்களுடன் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்து உரிய முறைப்பாட்டை மீளப்பெற குறித்த யுவதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.