விவசாயிகள் வாங்கும் 50 கிலோ யூரியா மூடை 10,000 ரூபாவுக்கு விற்கப்பட்டாலும், இன்று முதல் அனைத்து விவசாய சேவை மையங்களிலும் உர மூடையின் எடைக்கேற்ப கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ளை பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உர மூட்டைகளில் உரிய அளவு உரம் இல்லை என இன்று (19) பல பத்திரிகைகளில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமாரவிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, இன்று (19) காலை, லங்கா உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றின் உர விநியோக நடவடிக்கைகளை அவதானித்த செயலாளர், தம்புள்ளை பிரதேசத்திற்கு உரிய எடையுள்ள உரங்கள் வழங்கப்படாமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்தார்.
மேலும், விவசாயிகள் யூரியா உரத்தை கொள்வனவு செய்யும் போது அதன் எடைக்கு மாத்திரமே பணம் வசூலிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.