கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ரேணுகா லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதும், எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில்,
தற்போது சுமார் 1,500 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முன்னர் நல்ல போஷாக்கான உணவு வழங்கப்பட்டபோதிலும், தற்போது சோற்றுடன் இரண்டு கறிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அவற்றில், பூசணிக்காய், பருப்பு, உருளைக்கிழங்கு, மாங்காய், கரட் என ஏதாவது இரண்டு கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்படுகிறது. ஒரு துண்டு மீன் அல்லது முட்டையோ தற்போது வழங்கப்படுவதில்லை.
மேலும், நோயாளிகளுக்கு முன்னர் தோடம்பழம், தயிர், யோகட், ஜெலி போன்றனவும் வழங்கப்பட்டன. எனினும் தற்போது அவற்றை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை.
அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுகிறது. நோயாளர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுகாதார பணியாளர்களுக்கு போஷாக்கான உணவு கூட கிடைப்பதில்லை.
சுகாதார பணியாளர்களுக்கு தேங்காய் சம்பல், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் பூசணி போன்றவற்றுடனே சோறு பரிமாறுகிறார்கள் என்றார்