அரச உத்தியோகத்தர்கள் 05 வருட காலத்திற்கு சம்பளமில்லாத விடுமுறையில் வெளிநாடு செல்ல அனுமதியளிக்கும் ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (13) அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
இதன்படி, அரச உத்தியோகத்தர்களுக்கு தமது பதவிக்காலத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அந்த அதிகாரியின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு எவ்வித தடையும் ஏற்படாது எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரச உத்தியோகத்தரும் ஏற்கனவே சம்பளத்துடன் அல்லது சம்பளமின்றி வெளிநாட்டில் இருந்தால், மேலும் சம்பளமற்ற விடுமுறையை எடுக்க விரும்பினால், இலங்கைக்குத் திரும்பாமல், முறையான அனுமதியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் கீழ் விடுமுறை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும், அரச சேவையில் தலையிடாத வகையில் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.