அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களால் இந்தியா மற்றொரு இலங்கையாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசுதான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையையும் இந்தியாவையும் ஒப்பிடுவதற்கான விளக்கப்படங்களையும் அவர் சமர்பித்துள்ளார்.
வேலையின்மை, எரிபொருள் விலை மற்றும் இன வன்முறை அடிப்படையில் குறித்த வரைபடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், இந்தியாவும் அந்த திசையில் பயணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
