ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது எரிபொருள் பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டதாக காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தவிர்க்க காவல்துறையினர் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டும்.
12 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.
அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்த போதிலும், அவர்கள் கட்டளைக்கு மாறாக செயற்பட்டதால் தடியடி பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டு அடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
அதன்போத, ஒரு குழுவினர் கலைந்து சென்ற போதிலும், மேலும் சிலர் ரயில் பாதையில் இருந்த கற்களை வீசி எரிபொருள் பௌசரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
அதனால், காவல்துறையினர் குறைந்த பட்ச பலத்தை பிரயோகித்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் முழங்காலுக்கு கீழே சுட உத்தரவிட்டு கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது காவல்துறையினர் அதிக பலத்தை பிரயோகித்தனரா? என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க காவல்துறை தலைமையகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.