இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை, இலங்கையில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் எடுக்கப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் சாஹ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கையில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் அதனை இலங்கையில் நடத்த முடியுமா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பான இறுதி தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி நடைபெறவுள்ள மே மாதம் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் சாஹ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், ஆசிய கிண்ணத் தொடரை நடத்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.