ரிதியகம சஃபாரி பூங்காவில் விலங்குகள் படுகொலை செய்யப்படுவதாக அந்த பூங்காவின் கால்நடை வைத்தியர் பிரியசாத் எதிரிவர்ண தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளதாவும், அங்கு தொடர்ந்து பணிபுரிய முடியாத அவலநிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரிதியகம சஃபாரி பூங்காவிற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட விலங்குகள் மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு யுக்திகளை கையாண்டு விலங்குகளை கொன்ற பிறகு, அவற்றின் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவு பிரிவினர் மேற்கொள்ளும் மோசடிகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் வெளிப்படுத்த தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 5 வருடங்களாக தனது கடமைகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் பதவி விலக நேர்வதாகவும் வைத்தியர் பிரியசாத் எதிரிவர்ண தெரிவித்தார்.
ரிதியகம சஃபாரி பூங்காவில் உள்ள டோரா என்ற சிங்கக்குட்டியை பராமரிப்பதன் மூலம் அவர் பிரபலமடைந்தார்.
எவ்வாறாயினும், வைத்தியர் பிரியசாத் எதிரிவர்ண அண்மையில் டோராவை பார்வையிடச் சென்ற போது கால்நடை மருத்துவர்களால் தாக்கப்பட்டு தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.