பெருமளவிலான இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இந்தியக் கடலோரக் காவல்படையினருடன் தமிழக காவல்துறை இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அகதிகள் நெருக்கடி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு முதலில் வந்த குழுவில் உள்ள 3 பேரை 15 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், சிறுவர்கள் இருவரும் தத்தமது தாய்மார்களுடன் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய அகதிகளை மண்டபம் முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மனிதாபிமான அடிப்படையில் இந்த அகதிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் புகலிடம் வழங்க வேண்டும் என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.