மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்க மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் நேற்று மின்வலு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிடம் வினவியபோது, சட்டத்தின் மூலம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க தமது ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதிலும் அரசாங்கம் இதுவரையில் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என தெரிவித்தார்.
ஆனால் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.