2022 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி தொடங்குகிறது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் விதிமுறைகளில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை பல மாற்றங்களை செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்.) வாய்ப்பு ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒன்றில் இருந்து 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ஒரு அணி களமிறங்க முடியாவிட்டால், அந்த ஆட்டம் மறு திகதியில் நடத்த முயற்சிக்கப்படுவதுடன், அதுவும் முடியாவிட்டால், அந்த விடயம் ஐ.பி.எல். தொழில்நுட்ப குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொழில்நுட்பக் குழு எடுக்கும் முடிவு இறுதியானதாக இருக்கும்.
ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழக்கும்போது, மறுமுனையில் உள்ள துடுப்பாட்ட வீரர், எதிர் பகுதிக்கு சென்றிருந்தாலும் அல்லது செல்லாமல் இருந்தாலும், புதிதாக களமிறங்கும் வீரரே பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிளேஓஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டியில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்து சூப்பர் ஓவர் நடத்த முடியவில்லையாயின், லீக் புள்ளிப் பட்டியலில் முன்னணியில் உள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.