2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேற்றை அறிய முடியும்.
2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த பரீட்சையில், தமிழ் மொழிமூலம் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலம் 255,062 மாணவர்களும் என மொத்தமாக 340, 508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த முறை 20,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களில் 250 விசேட தேவையுடைய மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 149, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 148 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பதுளை, ஆகிய மாவட்டங்களுக்கு 147 ஆகவும், நுவரெலியா 146, வவுனியா 147 மற்றும் இரத்தினபுரிக்கு 145 ஆகவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.