கிரிபத்கொடை முதியன்சேகே தோட்டப் பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அவர் நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
நேற்று (08) மாலை குறித்த வீட்டின் அயலவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சடலம் கூரை ஓடுகளால் மூடப்பட்டு, உடல் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாழடைந்த வீட்டைப் பழுதுபார்ப்பதற்காக ஆண் ஒருவர் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், சிசிரிவி கெமராக்களைப் பயன்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, அங்கொடை மனநல வைத்தியசாலையில் இருந்து குறித்த பெண் பெற்றுக் கொண்டதாக கருதப்படும் பல மாத்திரைகளும் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சடலம் ராகம வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.