அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று (08) வெளியிட்டது.
விசேட கடமைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட விசேட அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நிறுவனங்களினதும், கடந்த இரு மாதங்களுக்கான மின் கட்டணங்களை பரீட்சித்து, அவற்றை ஒப்பிட்டு பார்த்து, மின் கட்டணத்துக்காக செலவிடும் தொகையை குறைப்பதற்கு அந்நிறுவனங்களின் உயரதிகாரிகள் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து மற்றும் தொடருந்துகளில் பணிக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் தாமதத்தை கருத்திற் கொண்டு, ஸ்தாபன சட்ட விதிகளின் பிரகாரம் அரை மணித்தியால கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.