அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வோர்னின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தில் அவர் தங்கியிருந்த விடுதிக்குள் உடற்பிடிப்பு தொழிலில் ஈடுபடும் 4 பெண்கள் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிரிவி காணொளிகளில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு காவல்துறையினரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஷேன் வோர்ன் தமது அறையில் உயிரிழப்பதற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பகல் வேளையில் தனது நண்பர்கள் மூவருடன், கோஹ் சாமுய் (Koh Samui) தீவுப் பகுதியில் அவருக்கு சொந்தமான விடுதியொன்றில் வைத்து, இரு பெண்களால் ஷேன் வோர்னுக்கு உடற்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அதே தினத்தன்று மாலை 1.53க்கு நான்கு பெண்கள் குறித்த விடுதிக்குள் செல்லும் காட்சிகள் சிசிரிவி காணொளிகளில் பதிவாகியுள்ளன.
எனினும், ஷேன் வோர்னின் அறைக்குள் இரண்டு பெண்கள் மட்டுமே சென்றுள்ளதாக காவல்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடற்பிடிப்பு தொழிலில் ஈடுபடும் 4 பெண்கள், பிற்பகல் 2.58 க்கு அவ்விடுதியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், வோர்னின் நண்பர்களுடன் இரண்டு பெண்கள், சுமார் இரண்டு மணிநேரம் செலவிட்டிருக்கலாம் காவல்துறை சந்தேகிக்கிறது.
குறித்த பெண்கள் விடுதியை விட்டு வெளியேறிய 2 மணிநேரங்களுக்கு பின்னரே ஷேன் வோர்ன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஷேன் வோர்னின் அறைக்குள் சென்ற இரு பெண்களும், அவர் உயிருடன் இருந்தபோது கடைசியாக சந்தித்தவர்கள் என நம்பப்படுகிறது.
குறித்த பெண்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.