தாய்லாந்தில் மாரடைப்பால் மரணமடைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வோர்னின் பிரேத பரிசோதனை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், தமது விசாரணைகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் குறித்து தாய்லாந்து காவல்துறையினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஷேன் வோர்ன், தாய்லாந்துக்கு மூன்று மாத ஓய்வுக்காகச் சென்ற நிலையில் திடீர் மரணமடைந்த செய்தி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் கோஹ் சாமுய் (Koh Samui) தீவுப் பகுதியில் அவருக்கு சொந்தமான விடுதியொன்று உள்ளது.
அங்கு தனது நண்பர்கள் மூவருடன் விடுமுறையை கழிப்பதற்காக கடந்த 4 ஆம் திகதி இரவு ஷேன் வோர்ன் அங்கு சென்றுள்ளார்.
வோர்னின் நெருங்கிய நண்பராகவும், உதவியாளராகவும் அறியப்படும் அண்ட்ரூ நியோபிடோவ் (Andrew Neophitou) என்பவர்தான் கடைசி நிமிடங்களில் அவருக்கு முதலுதவி அளித்துள்ளார்.
இருப்பினும், அவரின் முயற்சிகள் வீணாகின. தற்போது தாய்லாந்து வைத்தியசாலையில் ஷேன் வோர்னின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தாய்லாந்து காவல்துறையினர் ஷேன் வோர்னின் இறப்பு நிகழ்ந்த அவரின் விடுதியை சோதனையிட்ட பின்பு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவு குறித்து, தாய்லாந்து காவல்துறையினர் கூறுகையில், “எங்கள் சோதனையின் போது வோர்னின் அறையின் தரை விரிப்பிலும், 3 துவாய்கள் மற்றும் தலையணையிலும் இரத்தக்கறைகள் காணப்பட்டன.
ஷேன் வோர்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நோயாளர் காவு வண்டி வருவதற்கு முன்பு அவரின் நண்பர் ஆண்ட்ரூ சிபிஆர் (வாய் வழியாக செயற்கை சுவாசம் அளிக்கும் முயற்சி) சிகிச்சை அளித்துள்ளார்.
அதன்போது, அவருக்கு இருமல் மற்றும் இரத்தபோக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷேன் வோர்னின் அறையில் வாந்தி இருந்தது. ஆனால் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எங்கள் விசாரணையின் அடிப்படையில் சம்பவ இடத்தில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.
அவருக்கு ஆஸ்துமா மற்றும் இதயப் பிரச்சினைகள் இருந்துள்ளதாக விசாரணையின்போது எமக்கு அறியக் கிடைத்தது. ஷேன் வோர்ன் போதைப்பொருள் உபயோகித்த தடயங்களும் இல்லை” என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஷேன் வோர்னின் கடைசி நிமிடங்கள் குறித்து நீண்டகாலமாக அவரது முகாமையாளராக இருந்துவந்த ஜேம்ஸ், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “ஷேன் வோர்ன் மூன்று மாத ஓய்வு எடுக்க திட்டமிருந்தார்.
அதன் தொடக்கம்தான் இது. தாய்லாந்து நேற்று முன்தினம் இரவுதான் வந்திருந்தார். மாலை 5 மணிக்கு மது அருந்தச் செல்வது அவரது வழக்கம்.
ஷேன் வோர்ன், எப்போதும் நேர முகாமைத்துவத்தை கடைபிடிப்பவர். ஆனால், நேரம் ஆகியும் ஷேன் வோர்ன் வரவில்லை. ஏதோ தவறு உள்ளது என்பதை உணர்ந்த நண்பர்கள் 5.15 மணிக்கு அவரின் அறையின் கதவை தட்டினர்.
அதன்போது அறையினுள் ஷேன் வோர்ன் உணர்வில்லாமல் இருந்ததைக் கண்டு அவருக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்துள்ளார்.
நோயாளர் காவு வண்டி வருவதற்கு தாமதமாகலாம் என்பதால் அவர்களே முதலுதவி செய்தனர்.
நோயாளர் காவு வண்டி வந்தபின், அவர்களும் ஷேன் வோர்னுக்கு 10 – 20 நிமிடங்கள் சிபிஆர் முதலுதவி சிகிச்சை செய்தனர்.
இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஷேன் வோர்ன் உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதி செய்தனர்” என்றார்.