புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கான அமைச்சரவையின் தீர்மானம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கருத்து கோரலோ அல்லது அறிவுறுத்தலோ மேற்கொண்டு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் காரணமாக சிறு குழந்தைகளுக்கு தாயின் அன்பும், அரவணைப்பும் உரிய காலப்பகுதியில் கிடைக்காமல் போவதாக அந்த அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்பான தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு 05 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் தற்போது நிலவுகின்ற ‘குடும்பப் பின்னணி அறிக்கை’ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதால், பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2 வயதோ அல்லது 2 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகள் உள்ள பெண்கள், வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கட்டாயமாகக் குடும்பப் பின்னணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனும் தேவையிலிருந்து விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.