தனது தந்தை விட்ட இடத்திலிருந்து நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பிப்பதாகவும், சிறிய மனிதனின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக குருணாகல், மாவத்தகம, சதிபொல விளையாட்டரங்கில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசாங்கத்தின் கீழ் படைவீரர்களின் ஓய்வூதியப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டை எப்போதும் நேசிக்கும் ஒரு அரசியல் சக்தி எனவும், நாட்டுக்கு பாதகமான அரசியல் தீர்மானத்தை தமது கட்சி ஒருபோதும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த சந்ததியினர் சுதந்திரமாக இந்த நாட்டில் வாழக்கூடிய சூழலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தியதாகத் தெரிவித்த அவர், விவசாயத்தின் மூலம் இந்த நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக வலியுறுத்தினார்.