ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அந்தக் கட்சிகளில் இருக்கும் சிலர் தான் அரசியலுக்கு கொண்டு வந்தவர்கள் என்பதால் அது தொடர்பில் தனக்கு நன்றாகத் தெரியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் அன்றி, மக்களை வாழ வைப்பது தொடர்பிலே போட்டியிருப்பதாகவும் , கேஸ் சிலிண்டரை தேடிச் சென்ற யுகத்திற்கு முடிவு கட்டுவதற்கே இம்முறை வாக்களிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற சட்ட வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
“பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சட்டத்தரணிகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட சட்டத்தரணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
திருடர்களைப் பிடிப்பது தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திருடர்களைப் பிடிக்கும் பொறுப்பை ஜே.வி.பி ஏற்றுக் கொண்டது. பொலிஸ் உத்தியோகத்தரோ சட்டத்தரணியோ அல்லாத ஆனந்த விஜேபால நியமிக்கப்பட்டதோடு 400 கோப்புகள் தொடர்பில் அவர் செயற்பட்டார். பிரதமர் என்ற ரீதியில் தான் தேவையான ஏற்பாடுகளை மாத்திரம் வழங்கியதாக தெரிவித்த ஜனாதிபதி, எலிகளை பிடிக்க பற்கள் உள்ள பூனை இருக்க வேண்டும் எனவும், பூனைக்கு பற்கள் இல்லையென்றால் அதனை ஏசிப் பயனில்லை எனவும் தெரிவித்தார்.