தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த கடையில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் கடையினுள் இருந்தவாறு குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டார். இருப்பினும் அன்றையதினம் குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இருப்பினும் குறித்த ஊடகவியலாளர் கடையிலிருந்து உணவிற்காக பற்றுச்சீட்டு குறித்த இறைச்சி உள்ளிட்ட புகைப்படம் என்பவற்றை ஆவணப்படுத்தி, தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து மோசமான இறைச்சியை வழங்கினார் என்பது தொடர்பான முறைப்பாடு ஒன்றினை குறித்த ஊடகவியலாளர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார்.
முறைப்பாட்டு கடிதத்தினை ஆதாரமாகக் கொண்டு நேற்றையதினம் குறித்த ஹோட்டலை சோதனைக்கு உட்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாத இறைச்சி இருந்துள்ளமையைக் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் தூய்மையற்ற முறையிலே உணவுகளை கையாண்டமை இறைச்சினை கொள்வனவு செய்தமைக்கான பற்றுச்சீட்டு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தெரிய வந்தன.
அதனைத் தொடர்ந்து குறித்த உணவகம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இன்றையதினம் நீதி மன்றால் 65,000 ரூபா தண்டப்பணம் அளவிடப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.