நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் மலையகத்திலும் நேற்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்துக்கிடந்தன.
நுவரெலியா மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாட்டினையடுத்து வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் எண்ணெய் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட டீசல் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில எண்ணெய் நிரப்பு நிலையங்களில் சில கிலோமீற்றர் தூரம் வரை வாகன வரிசை காணப்பட்டதுடன் எரிபொருளின்றி இடையில் நின்ற வாகனங்களுக்கு டீசல் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களையும் வைத்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர்.
ஒரு சில எண்ணெய் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்து பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதேநேரம் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த பல வாகனங்கள் டீசல் இன்றி வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றையதினம் அதிகமான எண்ணெய் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற சுலோக அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஹற்றன் விசேட நிருபர்