பொலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்த வந்த இருவர் மற்றும் அவர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளும் காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரும் பாதாள உலக குழு தலைவர் லொரன்ஸ் பிஷ்னோவின் கும்பலை சேர்ந்தவர்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் விஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள பிஷ்னோயின் உதவியாளர்களில் ஒருவரான ரோஹித் கோதாராவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட், கறுப்பு ஜாக்கெட் மற்றும் டெனிம் காற்சட்டை அணிந்திருந்ததாகவும், மற்றவர் டெனிம் காற்சட்டை மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு முன் இருவரும் சல்மான் கானின் வீட்டை சுற்றி உளவு பார்த்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பாந்த்ராவில் உள்ள மவுன்ட் மேரி சர்ச் அருகே திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர், மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு முச்சக்கர வண்டியில் பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இருவரும் ஊரை தப்பிச் சென்றுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் சல்மான் கான் வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக மும்பை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர், லோரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தனது சமூக வலைத்தள பதிவில் சல்மான் கானை எச்சரித்துள்ளார்.