சுமார் 63 கோடி ரூபா வங்கிக் கடனை செலுத்தாத காரணத்தினால் வங்கியிடம் இழந்த கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலையை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஜகத் கஹந்தகமகே நீக்கியுள்ளார்.
நவலோக வைத்தியசாலையை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள விதம் பிரச்சினைக்குரியது என சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணி பிரியந்த அழகியவன்ன விடுத்த கோரிக்கையை ஏற்று அதற்கான தடை உத்தரவை நீக்கினார்.
ஹட்டன் நஷனல் வங்கிக்கு எதிராக நவலோக வைத்தியசாலையினால் முன்வைக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம்இ குறித்த தனியார் வைத்தியசாலையை விற்பனை செய்வதற்கு தடை விதித்து தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
தடை உத்தரவை நீக்குமாறு கோரி ஹட்டன் நஷனல் வங்கி ஆட்சேபனைகளை தாக்கல் செய்ததுடன், ஹட்டன் நஷனல் வங்கியிலிருந்து தனியார் மருத்துவமனையொன்றை நிறுவ பெறப்பட்ட சுமார் 63 கோடி ரூபா வங்கிக்கடன் குறித்த உண்மைகளை வங்கி சார்பில் ஆஜரான சட்டத்தரணி பிரியந்த அழகியவண்ண நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கடன் பெறும் போது பிணையாக வைத்திருந்த தனியார் மருத்துவமனை மற்றும் அதன் வளாகத்தை விற்று, கடன் தொகை மற்றும் அது தொடர்பான வட்டியை வசூலிக்க வங்கியின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி பிரியந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார்.
தமது வங்கி சட்டரீதியாக செயற்படும் வேளையில், உரிய சொத்தை விற்று, கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை வசூலிக்க விடாமல் தடை உத்தரவு பிறப்பிப்பது சிக்கலாக உள்ளதாக சுட்டிக்காட்டிய சட்டத்தரணி பிரியந்த அழகியவண்ண, அதற்கான தடை உத்தரவை நீக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பும் முன்வைத்த அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, குறித்த தனியார் மருத்துவமனையை விற்பனை செய்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.