மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாது விட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் எனவும், நீர் மற்றும் உணவுகள் ஊடாக பரவும் நோய் தொற்றும் அதிகரிக்க வாய்புள்ளதாகவும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தற்போது ஒழுங்கான முறையில் இடம் பெறாமையினால் மன்னார் நகர் பகுதி பாரிய தொரு சுகாதார சீர்கேட்டு நிலமைக்கு தள்ளப் பட்டிருக்கிறது.
மக்கள் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளும் போது சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை பின் பற்றுமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரம் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் வைத்தியசாலைகளிலும் திண்ம கழிவகற்றல் செயன் முறை முற்றாக முடங்கியுள்ளது.
நகர் புறங்களிலும் ,பொது இடங்களிலும் அதே நேரம் வைத்தியசாலை சூழலிலும் மருத்துவ கழிவுகள் அல்லாத ஏனைய கழிவுகள் சூழ்ந்து காணப்படுகின்றது.
தற்போது மழைக் காலம் என்பதனால் நோய் கிருமிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
குறிப்பாக டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகமாக காணப்படுகின்றது.
அதே நேரம் வயிற்றோட்டம்,வாந்திபேதி போன்ற நோய்களும் மழைக் காலத்தில் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்பு காணப்படும் என்பதுடன் மன்னார் நகர் பகுதியில் தேங்கியிருக்கும் இந்த திண்மக் கழிவுகள் இவ்வாறான கிருமி தொற்று பரவலுக்கு ஏதுவாக அமைவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் மன்னார் பொது வைத்தியசாலை சூழலிலும் கழிவுகள் மற்றும் புற்கள் உட்பட பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாகவும் ஆனாலும் மன்னார் வைத்தியசாலை சுத்தப்படுத்தலுக்கு போதிய ஆளனியினர் இன்மையால் இந்த பிரச்சினை நீடித்து வருவதாகவும் எனவே மன்னார் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள பொது மக்கள்,நலன் விரும்பிகள் வைத்தியசாலை சுழலை சுத்தப்படுத்த உதவிகளை வழங்க முன் வருமாறும் குழுக்களாகவும், தனி நபர்களாகவும் சிரமதான பணிகளை மேற்கொண்டு தங்களுடைய உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார பணி உதவியாளர்கள் 85 பேர் மன்னார் வைத்தியசாலையில் பற்றாக்குறையாக காணப்படுகின்ற நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 10 நபர்களே குறித்த சுத்தப்படுத்தல் பணிகளை மன்னார் வைத்தியசாலை சூழலில் மேற்கொண்டு வருகின்றகாக அவர் மேலும் தெரிந்தார்.