பலளுவெவ ரொலக்ஸ் விளையாட்டுக்கழகம் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்த அணிக்கு 11 பேர் கொண்ட ஆறு ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இம்மாதம் 20 ஆம் திகதி பலளுவெவ ரொலக்ஸ் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டி தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டதுடன் முதல் சுற்று லீக் முறையில் இடம்பெற்றது. நான்கு குழுக்களாக ஒரு குழுவில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டித் தொடர் இடம்பெற்றதுடன்,அரையிறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக நேகம நிவ் ஸ்டார் அணி,கெகிராவ ஒரியன்ஸ் அணி, ஹொராப்பொல யூனைடட் அணி,கட்டுகெலியாவ கே.சீ.சீ.அணி என்பன தகுதி பெற்றதுடன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நேகம நிவ் ஸ்டார் அணி ,ஹொராப்பொல யூனைடட் அணி என்பன இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றது.இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேகம நிவ் ஸ்டார் அணி ஆறு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொராப்பொல யூனைடட் அணி ஐந்து ஓவர்களில் 56 ஓட்டங்களை ஐந்து விக்கெட்டுக்களை இழந்து பெற்றதுடன் ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று ரொலக்ஸ் வெற்றிக் கிண்ணத்தையும் ரூபா 30000 பணப்பரிசினையும் ஹொராப்பொல யூனைடட் அணி சுவீகரித்துக் கொண்டது.
(கல்நேவ தினகரன் விசேட நிருபர்)